ஓய்வுநாள் (Sabbath) இந்த நாளில் அனேகர் கர்த்தரை, ஆராதனை நாளாக ஆராதிக்கின்றனர். அதிலும் அனேகர் வாரத்தின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்கின்றனர். அதற்குத் தத்தமது பக்கத்தில் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறுகிறார்கள். ஏன்? வேதாகமம் வெளிப்படுத்தும் சத்தியம் போதாமல் உள்ளதா? ஆகவேதான் வேதாகமம் போதிக்கும் சத்தியம்தான் என்ன என்பதை எல்லோரும் அறிந்து, இறைவனை, இறைவன் பிரியப்படுகின்ற நாளில் ஆராதனை செய்து, இரட்சிப்பை அடையும்படி, உபதேசிப்பதும், பத்துக் கட்டளைகளும் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஏற்று கீழ்ப்படிய வேண்டும் என்பதிலும், அதில் நான்காவது கட்டளையாகிய ஓய்வுநாள் ஆராதனையை வலியுறுத்திச் சொல்வதும் எங்கள் ஊழியத்தில் முதன்மையான பங்காகும்.

மேலும், முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்த சூழலும், சுனாமியும் எமது சொந்த பூமியில் (இலங்கை) அதிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுவிஷேச கூட்டங்கள், வீட்டுக்கூட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள், கிறிஸ்தவ புத்தகங்கள், பரிசுத்த வேதாகமங்களை இலவசமாக வழங்குதல், வேதாகமச் செய்திகளைப் பரப்பும் வீடியோ திரைப்படங்கள், தேவசெய்திகள் போன்றவற்றை கிராமங்கள் தோறும் காண்பித்தல், வீடு வீடாகச் சென்று கிறிஸ்துவை அறிவித்தல், கிளைச் சபைகளை நிறுவுதல், இலவச பாலர் கல்வி நிலையங்களை அமைத்தல், மற்றும் பராமரிப்பின்றித் தவிக்கின்ற அனாதைப் பிள்ளைகள், முதியோர்கள், விதவைகள், அங்கவீனர்களுடைய  உணவு உடை  உறைவிடங்கள், கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய தேவைகள் மிகமிக அதிகமாயுள்ளது. இவர்களுடைய இத்தேவைகளில் எம்மாலானமட்டும் பிரயாசப்பட்டு, உதவுவதும், இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்களை வழிநடத்துவதால் இவர்கள் இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ளும்படி இவர்களுக்கு உபதேசிப்பதும் இறைவனால் எமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட உன்னத பணியாகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலத்தோடும், அவருடைய ஆலோசனைகளிலும், வழிநடத்தலோடும்  எம்மை ஒப்பு கொடுத்து செயல் படுகின்றோம். இயேசு கிறிஸ்துதாமே இதை வாசிக்கின்ற உங்களையும் ஆசீர்வதிப்பாராக, ஆமேன்.